Education is the manifestation of the perfection already in man

- Swami Vivekananda



Founder



"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 
ஆலயம் பதினாயிரம் நாட்டல் 
பின்ன ருள்ள தருமங்கள் யாவும் 
பெயர் விளங்கி யொளிர நிறுத்தல் 
அன்ன யாவினும் புண்ணியங் கோடி 
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"

- என்பது மஹாகவி பாரதியாரின் வாக்கு


 

"ஏழ்மையால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் அங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்" என்பார் பாரதிதாசன்

தேடு கல்வியிலாத ஒரு ஊராக, மஹாகவியின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உட்படாத ஒரு ஊராக, நாம் கூடியிருக்கும் ஆதம்பாக்கம் அமைய வேண்டும் என்ற எண்ணம், நாட்டுப் பற்றுக்கே அடித்தளமான ஊர்பற்றுடையவர்களுக்கு ஏற்படுவது இயல்பு. அது போலவே என் நண்பர்கள் சிலருக்கும், எனக்கும், வாழ்கின்ற ஊரிலே ஒரு நல்ல பள்ளி அமைய வேண்டுமென எண்ணம் தோன்றிற்று.

ஆதம்பாக்கத்தில் "சிவனே" என்று இருந்து கொண்டு அமைதியாக வாழலாம் என்ற கனவோடு கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து குடிபெயர்ந்த என் கால்களில் நண்பர்கள் நிற்காத சக்கரத்தைப் பொறுத்திவிட்டார்கள்.

ஆதம்பாக்கத்தில் குலபதி பாலகிருஷ்ண ஜோஷி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 1985  ஆம் ஆண்டில் சுவாமி தயானந்தர் பேரால் தயானந்த ஆங்கிலோ வேதிக் பள்ளி (D.A.V. SCHOOL) நிறுவப் பெற்றது. அப்பள்ளியின் நிறுவனராக இருந்து நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

சுவாமி தயானந்தர் வேதங்களில் ஆழங்கால் பட்டவர். நுண்பொருள் கோட்பாட்டியலில் (Metaphysics) வல்லவர். சமுதாய சீர்திருத்தவாதி. அத்தைகைய மாமனிதரின் பெயரால் ஏறக்குறைய 570 மாணவ மாணவியருடன் தொடங்கப்பெற்ற டி.ஏ.வி. பள்ளி இன்று முப்பத்தொரு ஆண்டுகள் நிறைவு பெற்றுத் திகழ்கிறது.

"குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டு தொட்டும் அள்ளியும் அப்பியும்"

சிறு மகவு வளர்ந்து வாலிபப் பருவத்தை எய்துதல் போலவே, பற்பல தடங்கல்களையும், இடர்பாடுகளையும் தாண்டித்தான் டி.ஏ.வி. பள்ளி முன்னேறி, 7000 த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன் வானளாவிய கட்டிடங்களுடன் விளங்கிக் கொண்டிருக்கிறது.

இங்கு தெய்வ பக்தி, தேச பக்தி, ஒழுக்கம் இவற்றை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லித் தரப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், சமஸ்க்ருதம், ஹிந்தி ஆகிய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. இசையும் போதிக்கப்படுகிறது. யோகா பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

விழாக்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பெறுகின்றன. பற்பல இலக்கியக் கழகங்களால் நடத்தப்பெறும் போட்டிகளில் இப்பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள் ஏராளமான பரிசுகளை அள்ளிக் கொண்டு வருகிறார்கள். அனைத்துக்கும் மேலாக அரசு நடத்தும் பொதுத் தேர்வுகளில் ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளி மாணவர்கள் 100 சதவீத வெற்றியைத் தேடித் தருகிறார்கள் என்பதை இங்குப் பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.

அதே நோக்கத்தில் கிராமப்புறக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கற்பிக்க வேண்டும் என்ற தலையாய் நோக்கத்தில் 2009 ஆம் ஆண்டு  சந்தவேலூரில் டி.ஏ.வி. பள்ளி தொடங்கப் பெற்று, இன்று 1050 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளி C.B.S.E. பாடத்திட்டத்தில் இயங்குகிறது. மேலும் இசைப்பயிற்சி, யோகா ஆகியவையும் கற்பிக்கப் படுகின்றன. முக்கியமான தினங்களில் விழாக்களும், ஆண்டுதோறும் சிறப்பான முறையில் மாணவச் செல்வங்களின் கலை நிகழ்ச்சிகளுடன், சான்றோர்கள் பங்கேற்கும் ஆண்டு விழாக்களும் நிகழ்த்தப் பெறுகின்றன.

வாழ்க பாரதம் ! வந்தே மாதரம் !!

 

ச. வரதராஜன் 
நிறுவனர்
டி.ஏ.வி. பள்ளிக் குழுமம்